சிவசங்கர் பாபா ஆசிரமத்தில் பக்தர்களை அனுமதிக்க கோரி மனு: போலீஸ் நிராகரிப்பு

திருப்போரூர்:  சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தில் பிரபல டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான சுசில்ஹரி பன்னாட்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்து வந்த மாணவிகளுக்கு சாமியார் சிவசங்கர் பாபா ஆசிர்வாதம் அளிப்பதாக கூறி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வந்த புகார்களின் பேரில் டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 300 பக்க குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவசங்கர்பாபா தான் கைது செய்யப்பட்ட வழக்குகளில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை மெட்ராஸ் உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில் சிவசங்கர் பாபா ஆசிரமத்தில் அவரது பக்தர்களை அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டபோது அவருக்கு ஆதரவாக பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்தியவரும் செய்தியாளர்களுக்கு சிவசங்கர் பாபா குற்றமற்றவர் என்று பேட்டி கொடுத்தவருமான பிரபல வில்லன் நடிகர் சிவசண்முகராஜாவை தலைவராகவும், கவிதா என்பவரை செயலாளராக வும் கொண்டு சிவசங்கர் பாபா அறநெறி இயக்கம் என்ற பெயரில் அமைப்பை நடத்தி வரும் சிலர் செங்கல்பட்டு கலெக்டர் மற்றும் எஸ்.பி.யை சந்தித்து கடந்த வாரம் மனு ஒன்றை அளித்தனர்.

  மனுவில் சிவசங்கர் பாபா ஆசிரம வளாகம் ராமராஜ்யா அறக்கட்டளை என்ற பெயரில உள்ளதாகவும் இந்த வளாகத்தில் உள்ள பெருமாள் கோயில், தியான மண்டபத்திற்கு தங்களைப் போன்ற பக்தர்களை அனுமதிக்க மறுப்பதாகவும், பிராமணர்களை மட்டும் அனுமதிப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்காக மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. குணசேகரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. குணசேகரன், கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் சிவசங்கர்பாபா அறநெறி இயக்க தலைவர் நடிகர் சிவசண்முகராஜா, செயலாளர் கவிதா மற்றும் ராமராஜ்யா அறக்கட்டளை நிர்வாகிகள் தரப்பில் ஜானகி, மீனாட்சி ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினர்.

இதில் சுசில் ஹரி பள்ளி அமைந்து உள்ள வளாகம் ராமராஜ்ய அறக்கட்டளை என்ற தனியார் அமைப்புக்கு சொந்தமானது என்றும், இதில் வெளியாட்களை அனுமதிப்பது என்பது அறக்கட்டளை நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டது என்றும், தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் யாரையும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை ஏற்ற போலீசார் தனியார் ஆசிரம வளாகத்திற்குள் அனுமதிக்க போலீஸ் உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்து இரு தரப்பையும் அனுப்பி வைத்தனர்.

Related Stories: