ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிப்பதே தமிழக அரசின் விருப்பம்: ஐகோர்ட் கிளையில் தகவல்

மதுரை: ராஜிவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரையும் விடுவிப்பதே தமிழக அரசின் விருப்பம், இதில் ஜனாதிபதியின் முடிவுக்கு காத்திருப்பதாக ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு கூறியுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் இலவச சட்டப்பணிகள் ஆணைய உதவியுடன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். 20 ஆண்டுகள் வரை தண்டனை பெற்ற பலர், அரசால் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், என்னை விடுவிக்கவில்லை.

இக்கொலை வழக்கில் நீண்ட காலமாக சிறையிலுள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் கோரி, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன்மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை. எனவே, சட்டமன்ற தீர்மானத்தின் படி என்னை சிறையில் இருந்து விடுவிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் வீ.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ரவி ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் 7 பேரை விடுதலை செய்வதற்கான தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதியின் முடிவிற்காக காத்திருக்கிறோம். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் தமிழக அரசின் விருப்பம். ஆனால், ஜனாதிபதியின் ஒப்புதலின்றி செய்ய முடியாது. இது தொடர்பாக ஏற்கனவே நளினி தாக்கல் செய்த மனுவில், ஜனாதிபதிக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் ஏற்கனவே சென்னை ஐகோர்ட் முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. அதை மீறி இங்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது’’ என்றனர். அப்போது மனுதாரர் வக்கீல் சாமித்துரை, மனுதாரரிடம் ஆலோசித்து கூறுவதாக கூறினார்.  இதையடுத்து மனு மீதான விசாரணையை நீதிபதிகள் 2 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: