மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப்பணிகளை 3 ஆண்டில் முடிக்க நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை ஒன்றிய அரசு துரிதப்படுத்தி, 3 ஆண்டில் முடிக்கும் என நம்புவதாக ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இன்னும்  கட்டுமானப்பணிகள் துவங்கவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென்தமிழக மக்கள் மட்டுமின்றி, கேரள மாநில மக்களும் பயன் பெறுவர். மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் தமிழகத்திற்கு கூடுதல் இடமும் கிடைக்கும். கொரோனா காலத்தில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை இருந்திருந்தால், குறைவான கட்டணத்தில் தரமான மருத்துவ சிகிச்சை கிடைத்திருக்கும். எனவே, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை தாமதமின்றி ஒதுக்கவும், பணியை துரிதப்படுத்தி, விரைந்து முடிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த அறிவிப்பின்போது இடம் பெற்ற பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் நடக்கிறதா என்பது தெரியவில்லை. அமைச்சரவை ஒப்புதல் கிடைத்த 45 மாதங்களில் பணிகள் முடியும் என கூறப்பட்டிருந்தாலும், அதுபோல் நடக்கவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான ஒவ்வொரு கட்ட பணிக்கும் மனுதாரர் நீதிமன்றத்தின் மூலமே உத்தரவு பெற்றுள்ளார். எனவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை துரிதப்படுத்த தேவையான நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும். இந்த உத்தரவு கிடைக்கப்பெற்ற 36 மாதங்களுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது இவ்வாறு உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories: