பெண் எஸ்பி பாலியல் புகார் வழக்கு விசாரணை மாஜி டிஜிபி, எஸ்பி ஆஜராகவில்லை: வெளி மாநிலத்திற்கு மாற்றக் கோரி மேல்முறையீடு

விழுப்புரம்: பெண் எஸ்பி பாலியல் புகார் தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு எஸ்பியாக பணியாற்றிய கண்ணன் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளில் வழக்குபதிந்து, 400 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை,  டிசம்பர் 20ம்தேதிக்குள் விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, கடந்த 9ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. குற்றம் சாட்டப்பட்ட  இருவரும் நேரில் ஆஜராகினர். குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டு, இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார். தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணைக்கு நேற்றைய தினம் (16ம்தேதி) ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

அதன்படி, நேற்று காலை மீண்டும் வழக்கு விசாரணை நீதிபதி  கோபிநாதன் முன்னிலையில் வந்தது. அப்போது, முன்னாள் சிறப்பு டிஜிபி, எஸ்பி ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளோம்.வெளிமாநில நீதிமன்றத்திற்கு மாற்றி, இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளோம். தமிழக அரசின் பதிலுக்கு, கால அவகாசம்  கேட்டுக்கொண்டதால், இதுதொடர்பான விசாரணையை 18ம்தேதி (நாளை) சுப்ரீம் கோர்ட் நீதிபதி பெஞ்ச் ஒத்தி வைத்துள்ளது என்றனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோபிநாதன் வரும் 23ம்தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Related Stories: