விடுதலை போராட்டத்தில் பங்கேற்காத ஒரு இயக்கம் மத்தியில் ஆட்சியில் இருப்பது இந்தியாவின் துயரம்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை: 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்த ஆண்டு முழுவதும் சுதந்திர தின பவள விழா கொண்டாடப்படும். இந்தியாவின் துயரம் என்னவென்று சொன்னால், விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொள்ளாத ஒரு இயக்கம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரு மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு முன்பாக பாரத நாடு பிரிவினையின் கொடுமை தினத்தை கொண்டாடி இருக்கிறார். ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்றுதான் நாட்டு மக்கள் விரும்பினார்கள்.

ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை கடைசி வரை இந்து மகாசபையும், ஆர்எஸ்எஸ் தான் ஆதரித்தது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்திய நாட்டு சுதந்திரத்தை பற்றி பேசுவதற்கு இந்தியா மக்களின் சுதந்திர வேட்கையை நினைவுகூரவும், எந்தவித தகுதியும் கிடையாது. பிரதமர் மோடி எந்த ஒரு பெரிய திட்டத்தை கொண்டு வரப் போகிறார் என்பதுபற்றி நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இறை உணர்வு, இறை நம்பிக்கை எல்லோருக்கும் உள்ளது. அதையே அரசியலுக்குப் பயன்படுத்துவது தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார். இதுபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர் நல்லகண்ணு கொடியேற்றினார். அப்போது மாநில செயலாளர் முத்தரசன், துணை பொதுச்செயலாளர் வீரபாண்டியன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

Related Stories: