விவசாயி காலில் விழ வைத்த விவகாரம் விஏஓ, உதவியாளர் அதிரடி இடமாற்றம்

கோவை:  அன்னூரில் விவசாயி காலில் விழுந்த விவகாரத்தில் விஏஓ மற்றும் அவரது உதவியாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், அன்னூர் ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த வாரம் நில அளவை தொடர்பாக பேச வந்தவர் கோபால்சாமி. விவசாயி. இவரது காலில் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி விழுந்து மன்னிப்பு கோரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து கலெக்டர் சமீரன் உத்தரவுப்படி மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் நேரடியாக சென்று விஏஓ கலைசெல்வி, முத்துசாமி, கோபால்சாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிவில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலக உதவியாளரான முத்துசாமியை கோபால்சாமி காலில் விழ நிர்பந்தித்தது உண்மை என்றும், கோபால்சாமியை முத்துசாமி அறைந்ததாக கூறப்பட்ட புகாருக்கு முகாந்திரம் இல்லையெனவும் தெரிவித்திருந்தனர்.  கலெக்டரின் உத்தரவின்பேரில் கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோபால்சாமி தரப்பில் முத்துசாமி, கோபால்சாமியின் கன்னத்தில் அறைந்ததற்கான வீடியோ ஆதாரத்தை கொடுத்தனர்.  இது, கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் முத்துசாமி, கிராம நிர்வாக அலுவலர் கலைசெல்வி ஆகியோரை உடனடியாக பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: