வேலூர் பழைய பஸ்நிலையம் கார், பைக் பார்க்கிங் இடமாக மாறியதால் நெரிசல்-பஸ் டிரைவர்கள், பயணிகள் அவதி

வேலூர் : வேலூர் பழைய பஸ்நிலையம் கார், பைக் பார்க்கிங் இடமாக மாறியதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பஸ் டிரைவர்கள், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வேலூர் புதிய பஸ்நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வருவதால், அங்கு இயங்கி வந்த பெங்களூரு, ஒசூர், கிருஷ்ணகிரி மார்க்கமாக செல்லும் பஸ்கள், பிற மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

அதோடு உள்ளூர் பஸ்களும் இயக்கப்படுவதால், முன்பு இருந்ததை விட அதிகளவிலான பஸ்கள் ேவலூர் பழைய பஸ்நிலையத்திற்கு வந்து செல்கிறது. இதனால் பழைய பஸ்நிலையம் எப்போதும், பஸ்கள் நிறைந்து நெரிசலுடன் காணப்படுகிறது. இப்படி நெரிசல் மிகுந்த பஸ்நிலையத்தில், திருவள்ளுவர் சிலைக்கு பின்புறம் உள்ள பகுதி முழுவதும் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி முழுக்க, முழுக்க பார்க்கிங் இடமாகவே மாறிவிட்டது. இதனால் பழைய பஸ்நிலையத்திற்குள் வந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் பஸ்கள் செல்வதற்கு வழியின்றி அடிக்கடி, நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகளும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பஸ்நிலையத்திற்குள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வாகனங்களை அப்புறப்படுத்த மாநகராட்சியும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: