கோவையில் வேலுமணி நண்பர் நிறுவன ரெய்டில் ஆதாரம் சிக்கியது மாநகராட்சி தலைமை பொறியாளரின் பங்களா பல லட்சத்தில் புதுப்பிப்பு: லஞ்ச ஒழிப்பு துறையிடம் சிக்குகிறார்

கோவை: கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சம்பந்தப்பட்ட 42 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 10ம் தேதி சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் 2 வது நாளாக கோவை பீளமேட்டில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் நண்பர் சந்திரபிரகாசின் கே.சி.பி. நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர். 13 மணி நேரம் நடந்த ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதில், கோவையில் ஒப்பந்த பணிகளுடன் மாநகராட்சி அதிகாரிகளின் அரசு குடியிருப்புகளும் கே.சி.பி. நிறுவனம் மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

அதன்படி, கோவை மாநகராட்சி தலைமை பொறியாளர் லட்சுமணனுக்கு அரசு சார்பில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள பங்களா கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த பங்களா புதுப்பிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த பங்களாவை கே.சி.பி. நிறுவனம்தான் புதுப்பித்து கொடுத்துள்ளது என தற்போது தெரியவந்துள்ளது.

என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டு இந்த பங்களா புதுப்பிக்கப்பட்டது? புதுப்பித்து கொடுத்த பிறகு பர்னிச்சர் உள்ளிட்ட என்னென்ன பொருட்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டது? என்ற விவரம் அடங்கிய பில்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர். அரசு பங்களாவை தனியார் ஒப்பந்த நிறுவனம் ஏன் புதுப்பித்து கொடுக்க வேண்டும்? என்ற கேள்வியை லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்வைத்துள்ளனர். அதாவது, அரசு ஒப்பந்த பணிகள் நிறைவுபெற்றவுடன் அதற்கான பில் தொகை, செட்டில் செய்யப்படும்போது, காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரம் தலைமை பொறியாளர் லட்சுமணனுக்குத்தான் உள்ளது.

அதனால், அவரை குளிர்விக்கும் எண்ணத்தில் பங்களாவை புதுப்பித்து கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. லட்சுமணனுக்கு சொந்தமான தனியார் பங்களாவும் புதுப்பித்து கொடுக்கப்பட்டுள்ளதா? ஏதேனும் சொத்து வாங்கி கொடுக்கப்பட்டுள்ளதா? என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கின்றனர். கிடைத்துள்ள ஆவணங்கள் அடிப்படையில், மாநகராட்சி தலைமை பொறியாளர் லட்சுமணனிடம் விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Related Stories: