மாநிலங்களுக்கு இடையே செல்ல 2 டோஸ் தடுப்பூசி சான்றே போதும்...! ‘ஆர்டி-பிசிஆர் டெஸ்ட்’ நடைமுறை ரத்து: மாநில தலைமை செயலர்களுக்கு ஒன்றிய அரசு கடிதம்

புதுடெல்லி: மாநிலங்களுக்கு இடையிலான பயணத்திற்கு 2 டோஸ் தடுப்பூசி சான்று காட்டினாலே போதும் என்றும், ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் நடைமுறையை ரத்து செய்யும்படியும் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இதனால், மாநிலங்களுக்கு இடையில் செல்வோர் 2 தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை காட்டி எளிதாக சென்று வரலாம். கொரோனா பரவல் அச்சம் காரணமாக மாநிலங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதனை அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்து அறிவித்து நடைமுறைப்படுத்துகின்றன. குறிப்பாக மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை நெகடிவ் ரிசல்ட் அடிப்படையிலேயே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இப்போதைக்கு, சில மாநிலங்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை  ஆர்டி-பிசிஆர் சோதனைகள் நெகடிவ் சான்று பெறாமலேயே அனுமதிக்கின்றன.

ஆனால்  மேற்குவங்கம் (மும்பை, புனே மற்றும் சென்னையிலிருந்து வரும் பயணிகளுக்கு),  கர்நாடகா, கோவா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் பயணிகளின் இரண்டு டோஸ் போட்டிருந்தாலும் கூட, கட்டாய ஆர்டி-பிசிஆர் சோதனை நெகடிவ் சான்றுகளை கேட்கின்றன. சிக்கிம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற  மாநிலங்கள் ஆர்டி-பிசிஆர் சோதனை அறிக்கையின்றி இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலே, தங்களது மாநிலத்திற்குள் பிற மாநிலத்தினரை அனுமதிக்கின்றன. அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், ஒன்றிய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மக்களவையில்  கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், ‘மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தின் போது  ஆர்டி-பிசிஆர் சோதனை அறிக்கையை காட்ட வேண்டும் என்பது கட்டாயமல்ல; அதற்காக  இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட சான்றை காட்டினால் கூட அனுமதிக்கலாம் என்று  மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக்கொண்டுள்ளோம்’ என்றார்.  

இதுகுறித்து ஒன்றிய சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் ரூபிந்தர் பிரார் கூறுகையில், ‘மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையிலான  பயணத்தை மேற்கொள்ள விரும்புவோர், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காட்டினாலே போதும். ஆர்டி-பிசிஆர் சோதனை நெகடிவ் சான்றுகளை காட்ட வேண்டும் என்று நடைமுறையை ரத்து செய்யுமாறு  மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எங்களது அமைச்சகம் சார்பில் மாநில  தலைமை செயலாளர்களுக்கு எழுத்துப்பூர்வ கடிதம் அனுப்பி உள்ளோம். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒரே சீரான பயண நெறிமுறையை பின்பற்றுமாறு  அறிவுறுத்தி உள்ளோம். முன்னதாக சீரான  நெறிமுறையை முன்னெடுத்துச் செல்வது குறித்து சுகாதார மற்றும் சிவில்  விமான அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்றார். ஒன்றிய அரசின் இந்த வழிகாட்டல் நடைமுறையால், மாநிலங்களுக்கு இடையே சென்று வருவோர் தாங்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிழை காட்டிவிட்டு எளிதாக சென்று வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: