சென்னை போன்ற மாநகரங்களில் 60% மக்கள் முகக்கவசம் அணிவதை தவிர்கிறார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : சென்னை போன்ற மாநகரங்களில் 60 சதவிகித மக்கள் முகக்கவசம் அணிவதை தவிர்கிறார்கள்என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் 23 வழித்தடங்களில் புதிய பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மா. சுப்பிரமணியன் பேருந்தில் பயணம் செய்தனர்.

பின்பு, சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்ததாவது:

சைதாப்பேட்டை தொகுதியில், என்னுடைய கோரிக்கையினை ஏற்று, பல்வேறு கிராம / நகரங்களை இணைக்கக்கூடிய, 18 புதிய / பழைய வழித்தடங்களில் 23 மாநகரப் பேருந்துகள் / சிற்றுந்துகள் இயக்கத்தினை துவக்கி வைத்ததற்காக மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்கள் கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்வதற்கு, எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.  

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டது போன்று முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்வது போன்ற விதிமுறைகளை சரியாக கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.  சென்னை போன்ற மாநகரங்களில் 60 சதவிகித மக்கள் முகக்கவசம் அணிவதை தவிர்கிறார்கள். நாம் அன்றாட உபயோகப்படுத்துவது போன்று, முகக்கவசமும் நாம் கட்டயாம் அணிந்திட வேண்டும். நாம் இந்த விதிமுறைகளை சரியா கடைபிடித்தால் கொரோனா தொற்று முற்றிலுமாக கட்டுக்குள் வந்துவிடும். அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து விமானம் மூலம் வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். கட்டாயம் என்று கூறியுள்ளோம். இல்லையெனில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தி 15 நாட்கள் ஆகி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். இதே போன்று, ஆலப்புழா விரைவு வண்டியில் வருபவர்களுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். கட்டயாம் எனவும், அல்லது இரண்டு தடுப்பூசிகள் செலுத்தி இருக்க வேண்டும்  எனவும் தெரிவித்துள்ளோம்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்தவமனை கட்டுவதற்கு ஒன்றிய அரசு தான் நிதி வழங்ட வேண்டும்.  ஏற்கனவே, சுற்றுசுவர் கட்டுவதற்கு நிதி வழங்கப்பட்டு, சுற்றுசுவர் அமைக்கப்பட்டுள்ளது.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதி வழங்கிட தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.  மாண்புமிகு பாரத பிரதமரை நேரடியாக சந்தித்த போதும் இக்கோரிக்கையினை வலியுறுத்தினார்கள்.  என்னை அனுப்பியும் ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சர் அவர்களிடம் இக்கோரிக்கையை வலியுறுத்த செய்தார்கள்.  மேலும், தமிழகத்தில் கட்டப்பட்டு வருகின்ற 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு  மாணவர் சேர்க்கைகக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.  நேற்றைய தினம் வரை 9 கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Related Stories: