கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியில் யானைகள் உலா-பளியன்குடி மக்கள் அச்சம்

கூடலூர் : குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க அகழிகளை தூர்வாரி, மின் வேலி அமைக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு, பளியன்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சி 21ம் வார்டுக்குட்பட்டது பளியன்குடி வனப்பகுதி. மங்கலதேவி கண்ணகி கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் பழங்குடி ஆதிவாசியினத்தை சேர்ந்த 60 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இவர்கள், மலையடிவார பகுதியில் விவசாயம் செய்து அங்கேயே குடியிருந்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதிக்கு அடிக்கடி வனவிலங்குகள் வந்து இடையூறு செய்ததையடுத்து, இவர்களது குடியிருப்பை சுற்றி அகழியும், மின் வேலியும் அமைக்கப்பட்டது. ஆனால் உரிய பராமரிப்பு இல்லாததால், அகழிகள் தூர்ந்து போனது. மின் வேலிகள் பழுதடைந்த நிலையில் உள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் குடியிருப்பு பகுதியில் 2 குட்டிகள் உள்ளிட்ட 5 யானைகள் உலா வந்தன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து உடனடியாக கூடலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் வருவதற்குள் யானைகள் மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இருப்பினும் யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் பளியன்குடி மக்கள் உள்ளனர். எனவே இப்பகுதியில் தூர்ந்து போன அகழிகளை தூர்வாரவும், புதிய மின் வேலிகளை அமைக்கவும் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: