செய்யாறு அருகே கடுகனூரில் விவசாயிகள் அவதி நெற்களம் இன்றி சாலைகளில் காய வைக்கப்படும் நெல் குவியல்

* இரவில் விபத்து ஏற்படும் அபாயம்

* நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செய்யாறு : செய்யாறு அருகே கடுகனூரில் நெற்களம் இன்றி சாலைகளில் நெல் குவியல் காய வைக்கப்படுகிறது. இதனால் இரவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

செய்யாறு ஒன்றியத்துக்குட்பட்ட கடுகனூரை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் அறுவடை காலங்களில் அறுக்கப்படும் நெல் மணிகளை தூற்றி வார நெற்களம் இல்லாமல் சாலைகளிலே தூற்றி வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறும், விபத்துகளும் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் சாலையில் காய வைத்த நெல்மணிகள் குவிக்கப்பட்டு இருப்பதால் இரவில் வரும் வாகனங்கள் தெரியாமல் நெல் குவியல் மீது ஏறி வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. இதனை தடுக்க அப்பகுதியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நெற்களம் அமைத்திட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது, சொர்ணவாரி பட்டத்தில் சுமார் 5000 மூட்டை நெல் அறுவடை ஆகி உள்ளதாலும், அப்பகுதி கிராம மக்களின் வீடுகளின் அருகில் போதிய இடவசதி இல்லை. இருக்கின்ற நெற்களங்கள் சேதமடைந்துள்ளதாலும் சாலைகளிலேயே நெல்மணிகளை தூற்றி உலர்த்துகின்றனர். போக்குவரத்துக்கு உண்டான சாலையை பயன்படுத்துவது சாலை விதிமீறல் தான். மேலும் கடுகனூர் பகுதியில் செய்யாறு, ஆரணி, கொருக்கை, நாவல்பாக்கம் வழி சாலைகளில் நெல்மணிகளை காயவைப்பது குவியலாகக் குவித்து வைப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: