நிரவ் மோடியின் வக்கீல் வாதம் இந்திய சிறையில் அடைத்தால் தற்கொலை செய்து கொள்வார்: மேல்முறையீடு செய்ய இங்கி. நீதிமன்றம் அனுமதி

லண்டன்: நாடு கடத்தப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர நிரவ் மோடிக்கு இங்கிலாந்து உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி மோசடி செய்துவிட்டு, 2018ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவர் மீது அமலாக்கத்துறை, சிபிஐ தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே லண்டனில் கைது செய்யப்பட்ட அவர் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் அனைத்தும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன.

நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த இங்கிலாந்து உயர்நீதிமன்றம், நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டால் நிரவ் மோடி உளவியல் ரீதியாக பாதிக்கப்படலாம். அவர் தற்கொலை செய்துகொள்ள அதிக வாய்ப்புள்ளது என்று அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனை ஏற்று கொண்ட நீதிபதி ஜஸ்டிஸ் சாம்பர்லெய்ன் நிரவ் மோடிமேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

Related Stories: