விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் சோதனை வெற்றி

புதுடெல்லி: முதல் முதலாக உள்நாட்டிலேயே கட்டப்பட்ட, ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ விமானம் தாங்கி போர்க்கப்பல் வெற்றிகரமாக தனது 5 நாள் சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டுமான பணிகள், கொச்சி கடற்படை தளத்தில் சமீபத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இதையடுத்து, விக்ராந்த் சோதனை ஓட்டம் கடந்த வாரம் நடந்து வெற்றிகரமாக முடித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய கடற்படையின் செய்தி தொடர்பாளர் விவேக் மத்வால் அளித்த பேட்டியில், ‘‘உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் தனது முதல் கடல் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. திட்டமிட்டப்படி சோதனை ஓட்ட செயல்பாடுகள், அளவீடுகள் திருப்திகரமாக இருந்தது. கப்பலின் செயல்திறன், உந்துசக்தி, மின் உற்பத்தி மற்றும் விநியோகம், துணை உபகரணங்கள் சோதனை ஓட்டத்தின்போது பரிசோதித்து பார்க்கப்பட்டது.

கொரோனா உள்ளிட்ட சவால்கள் இருந்த போதிலும் முதல் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஏராளமானவர்களின் அர்ப்பணிப்போடு கூடிய முயற்சிக்கு இது ஒரு சான்று. நாட்டின் வரலாற்றில் இது முக்கிய மைல்கல்,’’ என்றார்.

Related Stories: