திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தமிழகத்தில் 15 வகையான பஞ்சகவ்யம் தயாரிப்பு: 4 மாதங்களில் பக்தர்களுக்கு விற்பனை செய்ய முடிவு

திருமலை: திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தமிழகத்தில் 15 வகையான பஞ்சகவ்யம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனை 4 மாதங்களில் பக்தர்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான சிறப்பு அதிகார குழு கூட்டம் தலைவர் ஜவகர் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்குப் பின் ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது: திருமலையில் காற்று மாசு அடைவதை தடுக்கும் விதமாக பசுமை எரிசக்தி திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இதற்காக முதற்கட்டமாக தனியார் நிறுவனத்தின் தயாரிப்பான மின்சாரத்தில் இயங்கும் 35 என்எக்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டு போக்குவரத்திற்கு வழங்கப்படும்.

இதற்கு மாதத்திற்கு 32 ஆயிரம் வீதம் தவணை செலுத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வாகனங்கள் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக்கப்படும். 2022ம் ஆண்டுக்கான டைரிகள் மற்றும் காலண்டர்கள் 12 லட்சம் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு லட்சம் சிறிய டைரி தயார் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த சின்ன ஜீயர் சுவாமி ராயலசீமாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோயில்களின் வளர்ச்சிக்கு தேவஸ்தான ஒத்துழைப்பு வேண்டும் என சில கோயில்களின் பட்டியலை பரிந்துரைத்தார். அதன்படி 10 கோயில்களுக்கு மொத்தம் ₹10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சித்தூர் மாவட்டம் வாயல்பாடு கோயிலில் முழுமையான கல் கட்டுமானத்திற்காக ₹6 கோடியும், நெல்லூர் மாவட்டத்தில் சீதாராம சுவாமி கோயில் கட்டுவதற்கு ₹80 லட்சமும், பர்டு குழந்தைகளுக்கான இருதய மருத்துவமனை புனரமைப்பு பணிகள் மற்றும் இயந்திரங்கள் வாங்க ₹2.3 கோடியும், திருமலையின் பாதுகாப்பை வலுப்படுத்த ₹2 கோடியில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தேவஸ்தான அச்சகம் நவீனமயமாக்கலுக்காக சப்தகிரி ஆன்மீக புத்தகம் தொழில்நுட்ப காரணங்களால் அச்சிடவில்லை. விரைவில் புதிய தோற்றத்தில் பக்தர்களுக்கு கிடைக்கும். பசுக்கள் பராமரிப்புக்காக மூன்று கோசாலைகள் அமைக்கப்படும்.

அனைத்து கோசாலையிலும் விஞ்ஞான ரீதியாக இயற்கை முறையில் நிர்வகிக்க நிபுணர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக எஸ்.விம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கோசாலைகளுக்குத் தேவையான உணவை பல்கலைக்கழகம் மூலம் பெறப்படும். கோசாலையில் காளை மாடுகளுடன் மகப்பேறு மருத்துவத் துறையுடன் கன்று மாடுகள் உருவாக்கப்பட உள்ளது.சுவாமிக்கு தீபாராதனைக்கு பயன்படுத்த தேசிய நாட்டு மாட்டு நெய் பக்தர்கள் தானமாக வழங்கலாம். தமிழ்நாட்டில் 15 வகையான பஞ்சகவ்யா பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவை நான்கு மாதங்களில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். நிர்வாக அலுவலகம் புதுப்பிக்க பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் மூலம் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு முன்னுரிமை தரிசனம், தற்போதுள்ள பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எண்ணம் இல்லை. இந்த ஆண்டு நடைபெற உள்ள பிரமோற்சவத்தில் பக்தர்களை அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.

வாணி அறக்கட்டளைக்கு ₹150 கோடியை பக்தர்கள் நன்கொடையாக வழங்கி உள்ளனர். வாணி அறக்கட்டளை மூலம் ஊருக்கு ஒரு கோயில் கட்டப்படும் என அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கூடுதல் செயல் அதிகாரி தர்மா, இணை செயல் அதிகாரி பார்கவி, முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

சுவாமிக்கு பயன்படுத்திய மலர்களில் அகர்பத்திகள் ஆகஸ்ட் 15ல் விற்பனை

ஆந்திர மாநிலத்தில் 5 லட்சம் விவசாயிகள் இயற்கை வேளாண்மை அடிப்படையிலான விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவசாயிகளை ஒருங்கிணைத்து தேவஸ்தானத்திற்கு தேவையான பொருட்களை விளைவித்து வாங்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சுவாமிக்கு பயன்படுத்தபட்ட மலர்களை கொண்டு தயார் செய்யப்பட்ட அகர்பத்திகள் ஆகஸ்ட் 15ம் தேதி பக்தர்களுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: