வேலூர், திருப்பத்தூர் வியாபாரிகளுக்கு வருமானம்: ஜவ்வாதுமலையில் காய்த்து தொங்கும் சீத்தாப்பழங்கள்

போளூர்: ஜவ்வாதுமலையில் சீசனில் சீத்தாப்பழங்கள் காய்த்து குலுங்குவதால் சென்னை, பெங்களூருவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த பழ வியாபாரிகளுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் ஜவ்வாதுமலையில் சீத்தாப்பழம் ஜூஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம்,  ஜவ்வாதுமலை வனப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான விளாமரங்கள் இயற்கையாக உள்ளன.

இதன் மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் டன் சுவைமிகுந்த விளாம்பழம் சென்னை போன்ற பெரும் நகரங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக கொய்யா, மா மற்றும் பலாப்பழம் உற்பத்தியும், அதற்கு அடுத்தபடியாக மேல்பட்டு, கல்லாத்தூர், கிளையூர் ேபான்ற பகுதிகளில் வாழைப்பழம் உற்பத்தியும் கணிசமாக உள்ளது. இவை அனைத்தையும் விட தற்போது சீசனில் சுவையான சீத்தாப்பழம் விளைச்சல் அதிகமாக உள்ளது. ஜவ்வாதுமலையில் விளை நிலங்கள், சாலையோரங்கள், கிராம பகுதிகள், வனப்பகுதிகள் என எங்கு பார்த்தாலும் சீத்தாப்பழம் காய்த்து குலுங்குவதை காணமுடியும்.

ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை இதன் சீசன் இருக்கும். இந்த பழங்களை அங்குள்ள மலைவாழ் மக்கள் யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். காரணம் அது குளிர்ச்சி தன்மை கொண்டதால், குளிர்ச்சியான ஜவ்வாது மலையில் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது என ஒருவித பயம் உள்ளது. இதனால் பெரும்பாலான மரங்களில் சீத்தாப்பழங்களை பறிக்ககூட ஆள் இல்லாமல் வீணாகி வருகிறது. இந்நிலையில் வேலூர், போளூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் போன்ற நகர பகுதிகளில் உள்ள வியாபாரிகள் ஜவ்வாதுமலைக்கு சென்று ஒரு பழப்பெட்டி ₹500க்கு என விலைபேசி வாங்கி அதனை அழகாக அடுக்கி ேகாயம்பேடு மற்றும் பெங்களூரு போன்ற இடங்களுக்கு விற்பனைக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பும், பொருளாதார வசதியும் கிடைக்கிறது. வாரந்தோறும் 5 இடங்களில் இருந்து 1000 பெட்டிகளுக்கு மேல் சீத்தாப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்படி பழவகைகளை உற்பத்தி செய்வதில் ஜவ்வாதுமலை சாதனை படைத்து வருகிறது. இருப்பினும், பொருளாதாரம் உயர இங்கு ஜூஸ் மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என ஜவ்வாதுமலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: