சினிமா தொழிலாளர்களுடன் ஒப்பந்தம் ரத்து பெப்சி - தயாரிப்பாளர் சங்கம் மோதல்

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை:தமிழ் திரையுலகம் சுமுகமாக இயங்க, தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு ஒத்துழைப்பு தருவதாக ஆர்.கே.செல்வமணி தலைமையிலான நிர்வாகிகள் ஒப்புக்கொண்டனர். அடுத்த நாளே அந்த அமைப்பு தயாரிப்பாளர்களின் நலனை சீர்குலைக்கும் வகையில் தன்னிச்சையாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தயாரிப்பாளர் சங்கத்துக்கும், பெப்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (ஒன் டு ஒன்), கடந்த 6-8-2021 முதல் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களை கட்டுப்படுத்தாது, உச்ச நீதிமன்ற ஆணைப்படி தயாரிப்பாளர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை பணியில் அமர்த்தி, படப்பிடிப்பு உள்பட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம். புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி தயாரிப்பாளர் சங்கத்தை அலட்சியப்படுத்திய பெப்சியுடன் இனி எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது. இதை மீறி படப்பிடிப்பு நடத்தவும், திரைப்பட தயாரிப்பு பணிகளை செய்யவும் எந்த அமைப்பாவது இடையூறு ஏற்படுத்தினாலோ அல்லது பணியாற்றுபவர்களை தடுத்தாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: