அன்னூர் அருகே ஒட்டர்பாளையத்தில் விஏஓ அலுவலக உதவியாளரை காலில் விழ வைத்த வீடியோ வைரல்: மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை

அன்னூர்: ஒட்டர்பாளையம் விஏஓ அலுவலக உதவியாளரை தனிநபரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஒட்டர்பாளையம் கிராமத்தில் கோபால்சாமி என்பவர் நில விவகாரம் தொடர்பான விவரங்களை பெற விஏஒ கலைச்செல்வியை அணுகினார். அப்போது கோபால்சாமிக்கும், கலைச்செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த விஏஓ அலுவலக உதவியாளர் முத்துசாமி தடுக்க முற்பட்டார். அப்போது அவரை சாதியைச் சொல்லி திட்டி, மிரட்டியதுடன் தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு கோபால்சாமி நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கோபால்சாமியின் கால்களில் முத்துசாமி விழுந்தபோது, பதிலுக்கு கோபால்சாமி என் மீதும் தவறு உள்ளது. நான் உன்னை மன்னித்துவிட்டேன். எழுந்திரு என கூறி சமாதானப்படுத்தினார்.

இந்த சம்பவத்துக்குபின் திடீரென முத்துச்சாமி தன்னை தாக்கியதாக கோபால்சாமி அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல் கோபால்சாமி மீது அரசு பணிகளை செய்ய விடாமல் தடுத்ததாக கலைச்செல்வியும் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் மாலை விசாரித்தனர். அப்போது, 3 பேரும் சமாதானமாக போவதாக எழுதி கொடுத்துவிட்டு சென்றனர்.இந்தநிலையில், கோபால்சாமியின் காலில் முத்துசாமி விழும் காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ தொடர்பாக விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.

இதுதவிர, விரிவான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க மாவட்ட வருவாய் அலுவலர் லலிதா அலெக்ஸ் தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். இதன்பின், அன்னூர் போலீசாரும், லீலா அலெக்ஸ் தலைமையிலான குழுவினரும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குபின், லீலா அலெக்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‘‘இந்த சம்பவம் குறித்து 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு விட்டது. இன்னும் ஹரி என்பவரிடம் மட்டும் விசாரணை நடத்த வேண்டும். அவரிடம் விசாரணை நடத்தியபின் விசாரணை அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை

கோவை கலெக்டர் ஜி.எஸ்.

சமீரன் கூறுகையில், ‘‘எஸ்பி தலைமையில் இரு தரப்பினரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். அதன்பேரில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினர்  விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்வார்கள்’’ என்றார்.

Related Stories: