அந்நிய செலாவணி சட்ட விதி மீறல் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு ரூ.10,600 கோடி அபராதம்: அமலாக்கத் துறை அதிரடி

புதுடெல்லி: இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் பிளிப்கார்ட், அமேசான், ரிலையன்ஸ் ஜியோமார்ட் நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பண பரிவர்த்தனை, வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள், தனிநபர்களுக்கு உத்தரவாதம் அளித்தல் உள்ளிட்ட அந்நிய செலாவணி சட்ட விதி மீறல்களில் பிளிப்கார்ட் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. இந்த விதி மீறல்கள் தொடர்பாக, பிளிப்கார்ட் நிறுவனத்தை கடந்த 2012ம் ஆண்டு முதல் அமலாக்கத் துறை கண்காணித்து வந்தது. இதில், பல்வேறு சூழல்களில் விதி மீறல் நடந்திருப்பது உறுதியானது.

இந்நிலையில், அந்நிய செலாவணி சட்ட விதி மீறலில் ஈடுபட்டதாக பிளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை ரூ.10,600 கோடி அபராதம் விதித்துள்ளது. இதையடுத்து, சென்னை அமலாக்கத்துறை பிரிவு சிறப்பு இயக்குனர் அந்தஸ்த்திலான அதிகாரியின் தலைமையில் பிளிப்கார்ட் நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. விசாரணைக்கு ஒத்துழைப்பு: பிளிப்கார்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், ``அந்நிய நேரடி முதலீடு உள்பட இந்திய சட்டங்கள், விதிமுறைகளை பிளிப்கார்ட் நிறுவனம் பின்பற்றி வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், அந்நிய செலாவணி விதி மீறலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறோம்,’’ என்றார்.

Related Stories:

>