மின் வெட்டுக்கு காரணமான வயர்களை மாற்றக்கோரி மின்வாரிய ஊழியர்களை சிறை பிடித்த பொதுமக்கள்: பெரியபாளையம் அருகே பரபரப்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே பனையஞ்சேரி கிராமத்தில் மின்சார வயர் அறுந்து கரண்ட் இல்லாததால், மின் வெட்டுக்கு காரணமான மின் வயர்களை உடனடியாக மாற்றித்தரக்கோரி மின்வாரிய ஊழியர்களை கிராம மக்கள் சிறை பிடித்தனர். அதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையம் அருகே பனையஞ்சேரி கிராமத்தில் விவசாயிகள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த கிராமத்தில் மின்சார கம்பிகள் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த மின்கம்பிகள் பழுதடைந்து அடிக்கடி அறுந்து கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்தன. இந்த மின் கம்பிகள் கீழே அறுந்து விழுந்தது குறித்து கன்னிகைப்பேர் மின்வாரிய அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். ஆனால், இரவு 10.30 மணிக்கு மின் ஊழியர்கள் வந்தனர். ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் மின் வாரிய ஊழியர்களை திருப்பி அனுப்பினர். இதனால், இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் கிராமத்தினர் கொசுக்கடியால் தூங்காமல் அவதிப்பட்டனர். பின்னர், நேற்று அதிகாலை மின்வாரிய ஊழியர்கள் பனையஞ்சேரி கிராமத்திற்கு வந்தனர். இவர்களை, கிராம மக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.

இதையறிந்த, மின்வாரிய பொறியாளர் வெங்கடேசன் மற்றும் பெரியபாளையம் எஸ்.ஐ இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களிடம் கிராம மக்கள்,  இந்த மின் கம்பிகள் போட்டு 60 ஆண்டுகளுக்கு மேலாவதால், இதை உடனடியாக மாற்ற வேண்டும். மேலும், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது’ என கூறினர். இதை கேட்ட மின்வாரிய அதிகாரி வெங்கடேசன் இன்னும் 10 நாட்களில் சீரமைத்து தருகிறேன் என உறுதியளித்தார். அதன்பிறகு, கிராம மக்கள் மின்வாரிய ஊழியர்களை விடுவித்தனர். இதனால், பனையஞ்சேரி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: