ஏசி, இன்வெர்டர், பிரிட்ஜ் கவனிக்காவிட்டால் சிக்கல்: மின்சார கட்டணம் அதிகரிப்பதை தடுப்பது எப்படி?: மின்வாரியத்தினர் தரும் முக்கிய ‘டிப்ஸ்’

நெல்லை: வீடுகளில் மின் நுகர்வை கட்டுப்படுத்தி மின் கட்டணத்தை எகிற விடாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து மின்வாரியத்தினர் முக்கிய டிப்ஸ் தந்துள்ளனர். தமிழகத்தில் வீட்டு பயன்பாட்டு மின் நுகர்வுக்கு 100 யூனிட் வரை கட்டணம் வசூலிப்பதில்லை. அதற்கு மேல் உபயோகப்படுத்தப்படும் மின்சாரத்திற்கு பல அடுக்கு மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் அளவு குறிக்கப்பட்டு குறிப்பிட்ட நாள் அவகாசத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்காக மின்சாரம் பயன்படுத்தும் சில நபர்களுக்கு கட்டணம் அதிகமாக வருவதாக ஆதங்கப்படுகின்றனர்.  மின்நுகர்வை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி, என்ன காரணங்களுக்காக மின்சாரம் விரயப்படுத்தப்பட்டு கூடுதல் நுகர்வு ஏற்படுகிறது. இதை தடுப்பது எப்படி என்பது குறித்து மின்வாரிய வட்டாரங்களில் கேட்டபோது அவர்கள் தந்த டிப்ஸ்: பொதுவாக ஏசி பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் மின் நுகர்வு ஏற்படுவது இயல்பு. ஏசி டெம்பரேச்சர் அளவை 18 என வைத்துக் கொண்டு பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.

25 முதல் 27 என்ற அளவில் வைத்து சீராக பயன்படுத்த வேண்டும்.கோடை காலமாக இருந்தாலும் இதே முறையை பின்பற்றுவதே சிறந்தது. ஏசியில் இருந்து தண்ணீர் அதிகம் வெளியேறினால் உடனடியாக கவனிக்க வேண்டும். ஏசியை உரிய நாட்கள் இடைவெளியில் பராமரிக்க வேண்டும். ரிமோட் மூலம் ஆப் செய்து விட்டாலும் மின்சாரம் எடுக்கும். ஏசியை எந்த அளவிற்கு அதிகமாக பயன்படுத்துகிறாமோ அந்த அளவு மின் செலவு ஏற்படும். எனவே பிரதான சுவிட்சை ஆப் செய்ய வேண்டும். டிவி, போன்ற பிற பயன்பாட்டிற்கும் ரிமோட் மூலம் ஆப் செய்துவிட்டு வெளியே செல்வது அல்லது தூங்க செல்வதால் கூடுதல் மின்சாரம் செலவாகும். எனவே தேவையில்லை என்றால் சுவிட்ச் ஆப் செய்வதே சிறந்தது. இது எல்லா மின்சாதன பயன்பாட்டிற்கும் பொருந்தும். தூங்கச்செல்லும் முன் வீட்டில் உள்ள பயன்பாடில்லாத எல்லா சுவிட்சுகளும் ஆப் செய்திருப்பதை உறுதி செய்யவேண்டும். செல்போன் சார்ஜ் செய்யும் போது சார்ஜ் முழுமையாக ஏறிய உடன் அகற்ற வேண்டும். சிலர் இரவு சார்ஜ் போட்டுவிட்டு காலையில்தான் எடுப்பார்கள். இது தவறானது.

இன்வெர்டர் பயன்படுத்துபவர்கள் அதை முறையாக பராமரிக்கவேண்டும். 3 மாதத்திற்கு ஒரு முறை டிஸ்லரி வாட்ர் அளவை செக் பண்ண வேண்டும். அவ்வப்போது தேவையான பராமரிப்பை செய்யவேண்டும். முறையாக பராமரிக்காவிட்டால் அதன் மூலம் தினமும் 10 முதல் 16 யூனிட் வரை கூடுதல் மின்சாரம் செலவாகும். குடிநீர் எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் மின் மோட்டாரிலும் கூடுதல் மின்சாரம் எடுக்கும். எனவே அதையும் சீராக பயன்படுத்த வேண்டும். அதிக மின்சாரம் தேவைப்படும் பெரிய அளவிலான மின்சாதன பொருட்களை அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றுவது சிறந்தது. பழைய பிரிட்ஜ் வைத்திருப்பவர்களுக்கு அதிக கூலிங் ஏற்பட்டால் மின்சாரம் பயன்பாடு அதிகமாகும். இதுபோலவே மின்சார அடுப்பு பயன்படுத்துவதாலும் மின்சார பயன்பாடு மிகவும் அதிகரிக்கும்.

சில வீடுகளில் குடிக்க வெந்நீர் வைப்பதற்கு கூட மின்சார அடுப்பை பயன்படுத்துகின்றனர். மின்சார அடுப்பு பயன்படுத்துகையில் அதன் பயன்பாட்டிற்குரிய பாத்திரங்களை பயன்படுத்தாவிட்டாலும் மின்சார அளவு அதிகரிக்கும். தற்போது டிஜிட்டல் மீட்டர் முறை அமலில் உள்ளதால் மின்துறையில் மின் கணக்கீட்டில் எந்த தவறும் நிகழ வாய்ப்பில்லை. மின்சாரத்தை முறையாக சிக்கனமாக பயன்படுத்துவதாலும், மின்சாதன பொருட் களை முறையாக பராமரித்து கையா ளுவதன் மூலமாக மட்டுமே மின் கட்டணத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றனர்.

Related Stories: