திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தமிழக பட்ஜெட் 13ம் தேதி தாக்கல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு; புதிய அறிவிப்புகள் வெளியாகிறது

சென்னை: தமிழக அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) வருகிற 13ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு தாக்கலாகும் முதல் பட்ஜெட் இது என்பதால், பொதுமக்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின், கடந்த மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், தலைமை செயலகம் வந்து 5 முக்கிய திட்டங்களை அறிவித்தார். அதன்படி கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம், பெண்களுக்கு அரசு மாநகர பஸ்களில் இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்ளிட்ட 5 திட்டங்களை அறிவித்தார். இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  திமுக ஆட்சிக்கு வந்தபோது, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் 21ம் தேதி 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் பேரவை கூட்டம் நடைபெற்றது. கவர்னர் உரையில், அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி, நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டங்கள், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை, சிங்கார சென்னை 2.0, புதிய தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் மற்றும் குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக திர்மானம் நிறைவேற்றப்படும்’’ என்று தெரிவித்தார். இதையடுத்து சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தின் 2021-2022ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்வதற்கான பணிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

கடந்த சில வாரங்களாக தினசரி, துறை அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், துறை அதிகாரிகளிடம் முதல்வர் ஆலோசனை நடத்தி வந்தார். இதன் அடிப்படையில், தமிழக பட்ஜெட் தமிழகத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நேற்று காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 2021-2022ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரும் 13ம் தேதி (வெள்ளி) தமிழக சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் தமிழக சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாடு ஆளுநர் இந்திய அரசமைப்பு, பிரிவு 174 (1)ன் கீழ் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டத்தை வருகிற 13ம் தேதி (வெள்ளி) காலை 10 மணிக்கு சென்னை, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் மூன்றாவது தளத்தின் கூட்ட அரங்கத்தில் கூட்டியுள்ளார். அன்றைய தினம், 2021-2022ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையினை பேரவைக்கு அளிக்க வேண்டும் என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, 2021-2022ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை வருகிற 13ம் தேதி (வெள்ளி) காலை 10 மணிக்கு பேரவைக்கு அளிக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட், வருகிற 13ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட்டில், தேர்தல் பிரசாரத்தின்போது திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு மக்கள் நல திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும், தமிழக பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்த அறிவிப்பும் வெளியாகும் கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தை தொடர்ந்து, மானிய கோரிக்கைகள் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தி, ஒவ்வொரு துறைக்கும் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதால், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை சுமார் மூன்று வாரங்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

* தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக இ-பட்ஜெட்

தமிழக சட்டப்பேரவையில் வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, நிதி அமைச்சர் படிக்கும் பட்ஜெட் புத்தகத்தகங்கள் கூடுதலாக அச்சடிக்கப்பட்டு முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்கள், பத்திரிகையாளர்களுக்கு பட்ஜெட் புத்தகம் வழங்கப்படும். தற்போது, முதல் முறையாக, காகிதம் இல்லாத சட்டப்பேரவை என்ற அடிப்படையில், இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கடந்த மாதம் 5ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகள் குழுவின் முதல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மு.அப்பாவு ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி, வருகிற 13ம் தேதி இ-பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அனைத்து எம்எல்ஏக்கள் இருக்கைகளுக்கு முன் சிறிய அளவில் கணினி (மினி கம்ப்யூட்டர்) மூலம் பட்ஜெட் விவரங்கள் தெரியும் வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக இதுகுறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Related Stories: