மருத்துவமனைகள் மேம்பாடு, மருந்துகள், ஆக்சிஜன் கையிருப்பு; 3வது அலையை சந்திக்க தயார்நிலையில் தமிழகம்: சென்னை போலீசில் வார் ரூம் திறப்பு

சென்னை: அச்சுறுத்தி வரும் 3வது அலையை சந்திக்க தயார்நிலையில் தமிழக அரசு உள்ளது. சென்னை போலீசில் இதற்காக வார் ரூம் உருவாக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் முதல் அலையை விட 2வது அலை வேகமாகவும், கொடூரமாகவும் பரவியது. அதில் பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. தமிழகத்திலும் தாக்குதல் அதிகமாக இருந்தது. திமுக அரசு பதவி ஏற்கும் நேரத்தில் இந்த தாக்குதல் அதிகரித்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டினார்.

இதனால் ஆரம்பத்தில் வேகமாக இருந்த கொரோனா தொற்று, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டது. திமுக அரசு பதவி ஏற்ற நேரத்தில் சென்னை மட்டுமல்லாது திருச்சி, கோவை, மதுரை போன்ற நகரங்களில் மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் இருந்தது. ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் புதிதாக ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகள் உருவாக்கப்பட்டன. வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையில் ஆக்சிஜன் அளவுக்கு அதிகமாக தயாரிக்கப்பட்டதால், பாதிப்புகள் வெகுவாக குறையத் தொடங்கின.

மேலும், ரெம்டெசிவிர் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகளும் அதிக அளவில் வாங்கப்பட்டு அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டன. வரிசையில் முதல்நாளே காத்திருந்து வாங்கும் நிலையை மற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது. இதனால், உயிர் பலிகள் வெகுவாக குறைந்தன. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் விரைவாக கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தநிலையில், நாடு முழுவதும் 3வது அலை வேகமாகவும், அதிக உயிர் பலி வாங்குவதாகவும் இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்தனர். அனைத்து மாநிலங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் 3வது அலையை தடுக்கவும், 3வது அலை வந்தால், அதை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை காக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது மாநிலம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அதிக அளவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன. மேலும் தேவையான அளவுக்கு மருந்துகள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவ மனைகள், கல்லூரிகள், பள்ளிகள், தற்காலிக மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

3வது அலை எந்த வகையில் வந்தாலும் அதை சமாளிக்க தற்போது தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரத்தில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடம் பேசி அதிக அளவில் தடுப்பூசிகள் வாங்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் தடுப்பூசிகள் தட்டுப்பாடுகள் இருந்தன. தற்போது தடுப்பூசி தட்டுப்பாடுகள் குறைந்து விட்டது. தினமும் பல லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை தமிழகத்தில் 2 கோடியே 18 லட்சத்து, 31 ஆயிரத்து 183 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழக அரசிடம் கையிருப்பில் தடுப்பூசிகள் அதிகமாக உள்ளன. இதனால், தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி, பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டால், 3வது அலை வந்தாலும் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று தமிழக அரசு கருதுகிறது. இதனால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில், சென்னை காவல்துறை சார்பில் தற்போது வார் ரூம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையில் இந்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஒருவருக்கு கொரோனா தொற்று வந்தால், அவருடன் இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பரிசோதனை செய்து, அவர்களை தனிமைப்படுத்துவது அல்லது பரிசோதனை செய்வது உள்ளிட்ட பணிகளை செய்ய சென்னை போலீசார் தயார்நிலையில் உள்ளனர். இதனால் 3வது அலையை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் தமிழக அரசு தயார்நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: