மூலைக்கரைப்பட்டி அருகே 3 ஆண்டுகளாக போக்குகாட்டி பொதுமக்களை அச்சுறுத்தும் கரடி: கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிரம்

நாங்குநேரி: மூலைக்கரைப்பட்டி அருகே வாழை தோட்டத்தில் பதுங்கிய கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பார்ப்பரம்மாள்புரத்தில் விவசாயி சிலுவை அந்தோணி (47) என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்துக்குள் நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் வேலை செய்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கரடி வாழைத் தோட்டத்தில் புகுந்ததை பார்த்தனர்.

இதனால் அச்சமடைந்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பி விஜயநாராயணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து போலீசார் களக்காடு மற்றும் நெல்லை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நெல்லை மாவட்ட வனத்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர்  அங்கு வந்தனர். அந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். வாழைத்தோட்டத்திற்குள் கரடி அங்கும் இங்கும் ஓடி போக்கு காட்டி வருவதால் அதனை பிடிக்க வனத்துறையினர் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளாக கரடி அவ்வப்போது இப்பகுதிக்கு வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே அவற்றை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: