கொரோனா பரவலை தடுக்க கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலானது

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா கூடுதல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது. இறைச்சி, மீன் கடைகள் மதியம் 2 மணி வரைதான் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் நேற்று அமலானது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே செயல்பட்டன.

மேலும், டவுன்ஹால், கடை வீதி, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, ஆர்.எஸ்.புரம் உள்பட அனைத்து பகுதிகளில் உள்ள கடைகள் மாலை 5 மணிக்கு மூடப்பட்டன.

சில கடைகள் தொடர்ந்து இயங்கி வந்த நிலையில், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை மூட வலியுறுத்தினர். இதையடுத்து, கடைகள் மூடப்பட்டன. அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அமர்ந்து 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கின. மாலை 5 முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைகள் மட்டும் நடந்தன. கடைகள் மூடப்பட்டதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

கடைகள் அடைக்கப்பட்டிருப்பதை போலீசார் மற்றும் அதிகாரிகள் உறுதிசெய்தனர்.

மேலும், கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடிசாலை, காந்திபுரம் 5,6,7வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை (ராயல் நகர் சந்திப்பு), ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை நோட்ட சந்திப்பு துடியலூர் சந்திப்பு, ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் இறைச்சி, மீன் கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>