நாகை எம்பி செல்வராஜ் கோரிக்கை ஏற்பு திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் டெமு ரயில் சேவை நாளை துவக்கம்: பயணிகள் மகிழ்ச்சி

திருவாரூர்: நாகை எம்.பி செல்வரஜ் கோரிக்கையின் பேரில் திருவாரூர்- காரைக்குடி ரயில் மார்க்கத்தில் நாளை முதல் சிறப்பு டெமு ரயில் சேவை துவங்கப்படவுள்ளதால் பொது மக்களும், ரயில் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2009ம் ஆண்டில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதைக்கான பணிகள் துவங்கின. இருப்பினும் ஆமை வேகத்தை விட மிகவும் குறைவாக நத்தை வேகத்தில் நடைபெற்று வந்த இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்களும், சேவை சங்கத்தினரும், அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.இதனையடுத்து பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஜுன் மாதம் 1ம் தேதி முதல் டெமு ரயில் சேவையாக 3 மாத காலத்திற்கு தொடங்கப்பட்டது.

பின்னர் 3 மாத முடிவின் போது தினகரன் செய்தி எதிரொலி காரணமாக ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு இயங்கிவந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தப்பட்டது. மேலும் திருவாரூரிலிருந்து 152 கி.மீ தூரம் கொண்ட காரைக்குடியினை அடைவதற்கு சுமார் ஆறரை மணி நேரம் வரையில் ஆன நிலையில் ரயில் சேவை என்பது பொது மக்களிடையே வரவேற்பு இல்லாமல் போனது. காரணம் 152 கிலோ மீட்டர் தூரத்தில் மொத்தம் 72 ரயில்வே கேட்டுகள் இருந்து வரும் நிலையில் இந்த ரயில்வே கேட்டுகள் பெரும்பாலானவற்றில் கேட் கீப்பர் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் மொபைல் கேட் கீப்பர்களை கொண்டு ரயிலில் இன்ஜினுக்கு அடுத்த படியாக இருக்கும் முதல் பெட்டியில் ஒரு கேட் கீப்பரும், கடைசிப் பெட்டியில் ஒரு கேட்கீப்பரும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி வழியில் ரயில்வே கேட் முன்னதாக ரயில் நிறுத்தப்பட்டு முதல் பெட்டியில் உள்ள கேட் கீப்பர் கேட்டை மூடி விட்டு அதே பெட்டியில் ஏறிவிடுவார். பின்னர் அந்த கேட்டை ரயில் கடந்த பின்னர் நிறுத்தப்பட்டு கடைசி பெட்டியில் இருக்கும் கேட் கீப்பர் கேட்டை திறந்து விட்டு மீண்டும் அதே ரயிலில் ஏறி கொள்வார். இதேபோல் ஒவ்வொரு ரயில்வே கேட்டிலும் ரயில் நிறுத்தப்பட்டு கேட்டு மூடப்படுவதும் பின்னர் திறக்கப்படுவதும் காரணமாக 152 கிலோ மீட்டர் தூரத்தினை 7 மணி நேரம் வரையில் கடக்க வேண்டிய நிலையில் பயணிகள் இருந்து வந்தனர். எனவே தற்போது கொரோனா தொற்று குறைந்து படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் காரைக்குடி வழி தடத்திலும் தேவையான கேட்கீப்பர்களை நியமானம் செய்து ரயிலின் வேகத்தினை அதிகரிக்கவும் பிற விரைவு ரயில்களை இயக்கிடவும் தென்னக ரயில்வே நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர், பொது மக்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதேபோன்று இந்த வழித்தடத்தினை உள்ளடக்கிய நாகை எம்.பி செல்வராஜ் உட்பட அனைத்து எம்.பிக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இதுதொடர்பாக தற்போதைய நாடாளுமன்ற கூட்டதொடரின் போது கடந்த மாதம் 24ம் தேதி புதிய ரயில்வே அமைச்சர் அஸ்வினிவைஷ்ணவிடம் எம்.பி செல்வராஜ் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் டெமு ரயிலானது சிறப்பு டெமு ரயிலாக நாளை (4ம் தேதி) முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளதாக என திருச்சி கோட்ட முதுநிலை மேலாளர் (இயக்குதல்) ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த ரயில் திருவாரூரிலிருந்து காலை 8.15 மணியளவில் புறப்பட்டு தொடர்ந்து மாங்குடி, மாவூர், திருநெல்லிக்காவல், ஆலத்தம்பாடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக மதியம் 2.15 மணியளவில் காரைக்குடியை சென்றடையும். இதே போல் எதிர் மார்க்கத்தில் காரைக்குடியிலிருந்து மதியம் 2.30 மணியளவில் புறப்படும் ரயில் இரவு 8.30 மணியளவில் திருவாரூர் வந்தடையும். ஞாயிற்றுகிழமைகளில் திருவாரூரிலிருந்து அதிகாலையில் திருச்சிக்கு இயக்கப்படும் எனவும் அறிக்கை ஒன்றில் ஹரிகுமார் தெரிவித்துள்ள நிலையில் இதற்கு பொது மக்கள் மற்றும் ரயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பேராசிரியர் பாஸ்கரன் மற்றும் பொறுப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: