மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மூன்று மாதங்களில் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்க: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மூன்று மாதங்களில் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் அலை வருவதற்குள்ளாக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட தீவிரம் காட்டி வரும் தமிழக அரசு, விரைந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் அடையாள அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி திட்டத்தையும் கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தக் கோரி கிரேஸ் பானு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முதல் தவணை 2000 ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாகவும் இரண்டாவது தவணை விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் தடுப்பூசி செலுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: