நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 2,600 டன் அரிசி ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம்புரண்டது

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்ய தெலங்கானா மாநிலம் ஹரீம்நகரில் இருந்து சுமார் 2,600 டன் அரிசி நேற்று அதிகாலை ரயில் மூலம் நாகர்கோவில் வந்தது. இந்த சரக்கு ரயிலில் மொத்தம் 42 வேகன்கள் இருந்தன. அதிகாலை 2 மணியளவில் பிளாட்பாரத்துக்கு வந்தபோது திடீரென கடைசி பெட்டி தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நேற்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து கிரேன் உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள் வரவழைக்கப்பட்டு, தடம் புரண்ட பெட்டியை சரி செய்யும் பணிகள் நடந்தன. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் சரக்கு ரயில்களுக்கான நிறுத்தகம் தனியாக அமைந்துள்ளதால், பயணிகள் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. சம்பவம் நடந்த பகுதியில் ரயில்வே காவல் நிலையம் உள்ளது. வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பைக்குகளை அங்கு நிறுத்தி இருந்தனர். தடம் புரண்ட பெட்டிகள் மோதியதில், அந்த பகுதியில் நின்ற 2 பைக்குகளும் சேதம் அடைந்தன. தடம் புரண்ட பெட்டியை சரி செய்யும் பணி நடந்தபோதிலும், ரயிலில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் இறக்கப்பட்டு லாரிகள் மூலம், மத்திய அரசு குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டன.

Related Stories: