ஒட்டன்சத்திரம் அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டுயானைகளால் பீதி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே குடியிருப்பு பகுதியில் 3 காட்டு யானைகள் புகுந்து முகாமிட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதி மலைக்கிராமங்களில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இதனால் இரவுநேரங்களில் விவசாயிகள், பொதுமக்கள் வெளியில் வரவே அச்சப்பட்டு வருகின்றனர். ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரமான செம்மடைப்பட்டியில் இருந்து லெக்கையன்கோட்டை வழியாக உள்கோம்பை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 3 காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து அச்சுறுத்தியது.

தகவலறிந்ததும் ஒட்டன்சத்திரம் வனச்சரகர் செந்தில், வனவர் மகேந்திரன் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து 3 யானைகளையும் மாஞ்சோலை மலைப்பகுதிக்கு விரட்டினர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘கடந்த 6 மாதங்களுக்கு முன்பு லெக்கையன்கோட்டை பகுதியில் காட்டுயானைகள் கூட்டமாக வந்து 3 நாட்களாக முகாமிட்டிருந்தது. அதன்பின் தற்போதுதான் ஒட்டன்சத்திரத்தை சுற்றி யானைகள் வலம் வர தொடங்கியுள்ளன. பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை. இரவு நேரங்களில் யானைகளை கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம்’’ என்றனர்.

Related Stories: