புதிய மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளர் கைது: விஜிலென்ஸ் போலீசார் அதிரடி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்ததாளப்பள்ளியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் புதிய தொழில் தொடங்குவதற்காக தனது கட்டிடத்திற்கு மின் இணைப்பு கேட்டு கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து இருந்தார். நீண்ட நாட்களாக இவருக்கு மின் இணைப்பு வழங்காததால் சந்திரகுமார் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று செயற்பொறியாளர் சுதாகரனை அணுகி கேட்டார்.

அப்போது அவரிடம் பேசிய அதிகாரி சுதாகரன் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக மின் இணைப்பு வழங்குவதாக தெரிவித்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்திரகுமார் இதுகுறித்து கிருஷ்ணகிரியில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகாரளித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி ரசாயன பொடி தடவப்பட்ட ரூ.3 ஆயிரம் லஞ்ச பணத்தை சந்திரகுமார், நேற்று காலை செயற்பொறியாளர் சுதாகரனிடம், அவரது அலுவலகத்தில் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத் சுல்தான் பாஷா மற்றும் போலீசார் கையும், களவுமாக சுதாகரனை கைது செய்தனர்.  இதைத் தொடர்ந்து அவரை விசாரணைக்காக கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Related Stories: