செங்கல் சூளை அதிகரிப்பால் சூறையாடப்பட்ட இயற்கை: கோவை தடாகம் பள்ளத்தாக்கு பாலைவனமாகும் அபாயம்..!

கோவை: கோவை தடாகம் பள்ளத்தாக்கு கனிம வள கொள்ளைகளால் பாலைவனமாகும் ஆபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் பொய்த்து போனதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றன. மண் மேடுகளாய் காட்சியளிக்கும் இந்த பகுதி கோவையின் தடாகம் பள்ளத்தாக்கு. இயற்கை கொஞ்சும் பசுமையான பிரதேசம் இன்று பாலைவனமாகும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கனிம வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன தடாகம் பள்ளத்தாக்கை செங்கல் சூளை அதிபர்கள் குறிவைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்டதன் விளைவாக இன்று பொலிவை இழந்து காணப்படுகிறது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை, வனத்துறை என யாரின் அனுமதியையும் பெறாமல் அரசியல் வாதிகளின் கருணையோடு மணல் கொள்ளை நடப்பதே இதற்கு காரணம் என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. சில இடங்களில் 150 அடி வரை மண் தோண்டப்பட்டுள்ளது. தடாகம் பகுதியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கனிம வளங்களின் மதிப்பு மட்டும் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி என்கின்றனர் விவசாய பிரதிநிதிகள். கனிம வள கொள்ளையின் விளைவாக நீர் வழித்தடங்கள், நதிகள் மலை சிற்றாறுகள் அளிக்கப்பட்டு கோவை வடக்கு மண்டலத்தில் தடுப்பணைகள் வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் மட்டம் 1,350 அடிக்கு கீழ் சென்றுவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள். விவசாயம் பொய்த்து போனதால் வாழ்வாதாரத்தை பறிக்கொடுக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. மலையில் தோண்டப்பட்ட மண் பிரதேசம் பள்ளங்களாகவும், நீர் குட்டைகளாகவும் மாறிப்போனதால் யானை வலசை தடங்கள் மாறியிருக்கின்றன. விளைவு யானை மனித மோதல்களால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கனிம வள கொள்ளையை தடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதன் விளைவாக 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளை சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் நீதிமன்றம் உத்தரவை மீறி தடாகம் பள்ளத்தாக்கில் இரவு நேரங்களில் கனிம கொள்ளைகள் நடப்பதாக குற்றம் சாட்டும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>