பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 500-க்கும் மேற்பட்டோர் கடிதம்!

டெல்லி: பெகாசஸ் விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 500-க்கும் மேற்பட்டோர் கடிதம் அனுப்பியுள்ளனர். பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் முக்கிய நபர்களின் செல்போன் போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. அதன்படி, இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், மனித உரிமை ஆர்வலர்கள், பெண்கள், கல்வியாளர்கள், பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டோர் என, பல்வேறு தரப்பினர் உளவு பார்க்கப்படுகின்றனர். மேலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணின் போனும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும். அதிகாரமுள்ளவர்களுக்கு எதிராக பாலியல் புகார் கூற தயங்கும் நிலை ஏற்பட்டு விடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மனித உரிமை ஆர்வலர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அனைத்து தரப்பு மக்களையும் பழிவாங்குவதற்கு இந்த உளவு மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். அத்துடன், இதுபோன்ற உளவு மென்பொருளை வாங்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: