உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் கோரிக்கை வைத்த நரப்பாக்கம் ஏரி மதகு சீரமைக்கும் பணி தீவிரம்

காஞ்சிபுரம்:  உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுத்து நரப்பாக்கம் ஏரி மதகு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் தாலுகா நரப்பாக்கம் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுபாட்டில் உள்ள இந்த ஏரியில் ஒரு மதகு, ஒரு கலங்கல் உள்ளது. இந்த ஏரியில் இருந்து அதே பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களுக்கு நீர் பாசனம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த கனமழையில் இந்த ஏரியின் மதகு, கலங்கல், கரை ஆகியவை சேதமானது. இதனால் ஏரியில் மழைநீர் சேமிக்க முடியாமல் வீணாக தண்ணீர் வெளியேறியது. மேலும் கால்வாயும் சேதமானது.

இந்தவேளையில், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை துவக்கி வைத்து, அதில் பொதுமக்களின் மனுக்களை பெற்றார். திமுக ஆட்சி அமைந்ததும், பெதுமக்களின் கோரிக்கைகள் 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். இதைதொடர்ந்து திமுக அபார வெற்றி பெற்று, தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இதற்கிடையில், மதுராந்தகம் பகுதியில், நடந்த பிரசாரத்தின்போது, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், நரப்பாக்கம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர், தங்களது கிராமத்தில் உள்ள ஏரியின் மதகு, கரை, கால்வாய் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். இதை தொடர்ந்து, திமுக ஆட்சி அமைத்தவுடன், அந்த மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள், உடனடி நடவடிக்கை எடுத்து, ஏரி மதகை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: