பயிர்க்காப்பீடு திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: பயிர்க்காப்பீடு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பயிர்க்காப்பீடு கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பு முன்பிருந்தபடி மாற்றியமைக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பை குறைக்கும் வகையில் உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முன்பிருந்தபடி 49:49:2 என்ற விகிதத்தில் காப்பீடு கட்டண பங்கினை திரும்ப மாற்றி அமைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வேளாண் துறையில் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என ஏற்கனவே தமிழக அரசு பெயர்மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் தமிழகத்தில் சாகுபடி பரப்பளவினை அதிகரித்தல், ஒருமுறைக்கு மேல் சாகுபடி செய்யும் பரப்பினை இரட்டிப்பாக்குதல் உணவு தானியங்களின் உற்பத்தி திறனை அதிகரித்தல் ஆகிய 3 தொலைநோக்கு பார்வையுடன் வேளாண்மைக்கென தனி வரவு செலவு திட்ட அறிக்கையை நடப்பாண்டு முதல் தாக்கல் செய்ய உள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் முக்கிய திட்டங்களில் ஒன்றான பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீடு திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக செயல்படுத்தி வருவதாகவும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முயற்சியினை காப்பீடு செய்யப்பட்டுள்ள பரப்பளவும், பதிவு செய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்றும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

காப்பீடு கட்டண மானியத்தில் ஒன்றிய அரசின் பங்கினை 49 விழுக்காட்டில் இருந்து பாசன பகுதிகளுக்கு 25 விழுக்காடு ஆகவும், மானாவாரி பகுதிகளுக்கு 30 விழுக்காடு ஆகவும் குறைத்து நிர்ணயித்து இருப்பதால் கடந்த 2016 - 17ல் ரூ.566 கோடியாக இருந்த மாநில அரசின் பங்கானது 2020-21ல் ரூ.1918 கோடியாக அதாவது 239 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளது என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று உள்ள இந்த காலகட்டத்தில் மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்து வரக்கூடிய நிலையில் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது தமிழக அரசு சவாலாக உள்ளதாகவும் அதனால் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்களிப்பை முன்பிருந்தபடியே மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>