குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய!: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்..!!

சென்னை: குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது. ஆகம விதிகளை மீறி அமைச்சர் சேகர்பாபு பேசி வருவதாக எஸ்.ஸ்ரீதரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் அர்ச்சகராகும் வகையில் தமிழக அரசு பயிற்சி திட்டத்தை கொண்டு வந்தது. அந்த பயிற்சியை முடித்த அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் அர்ச்சகராக நியமிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அடுத்த 100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் செயல்படத்தப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்திருந்தார். அவரது பேட்டியை அடிப்படையாக கொண்டு சென்னையை சேர்ந்த எஸ்.ஸ்ரீதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருக்கிறார். மனுவில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது, கருவறைக்குள் அனுமதிப்பது ஆகம விதிகளுக்கு முரணானது.

எனவே தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள 44 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட அறநிலையத்துறை கோயில்களில் 500 கோயில்களில் மட்டும் தான் ஆகம விதிகள் பின்பற்றப்படுகிறது. அந்த கோயில்களில் பயிற்சியை முடித்தவர்களை நியமிக்க கூடாது என்றும் மற்ற 43,500 கோயில்களில் அவர்களை நியமிக்கலாம் என்றும் மனுதாரர் மனுவில் அரசுக்கு யோசனை தெரிவித்திருந்தார். இந்த பொதுநல மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துக்குமார், உச்சநீதிமன்றமே ஆகம விதிகளை முறையாக படித்து தான் அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் அர்ச்சகராகலாம், மந்திரங்களை ஓதலாம் என்று உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

அந்த உத்தரவை மீறும் வகையில் இந்த பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். அதன் அடிப்படையில் இந்த வழக்கை ஆரம்பக்கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தார். அரசு தெரிவித்த சிவாச்சாரியார்கள் வழக்கு தொடர்பான உத்தரவை மனுதாரர்கள் ஆராய்ந்துவிட்டு அது தொடர்பான வாதங்களை முன்வைக்கும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்திருக்கிறது.

Related Stories: