வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: கூட்டாளிகள் 4 பேரும் சிக்கினர்

திருப்பரங்குன்றம்: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் அர்ஷத் (32). இவர் மதுரை வில்லாபுரத்தில் பேக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சொந்தமாக தொழில் தொடங்க மிஷின்கள் வாங்க ரூ.10 லட்சத்தை பையில் எடுத்துக் கொண்டு, இளையான்குடியில் இருந்து காரில், மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த பாண்டி என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்க ஜூலை 5ம் தேதி சென்றார். பாண்டி கூறியபடி, நாகமலை புதுக்கோட்டை - தேனி மெயின் ரோட்டில் உள்ள லாட்ஜ் அருகே அர்ஷத் காத்திருந்தார்.

அப்போது பாண்டி, அவரது நண்பர் கார்த்திக், மற்றும் வயதான ஒருவர் வந்து பார்த்துவிட்டு ஆவணங்களை எடுத்து வருவதாகக் கூறி அரைமணி நேரம் கழித்து வந்துள்ளனர். இதன் பின் அர்ஷத்துடன் காரில் ஏறியபோது காவல்துறை வாகனத்தில் வந்த நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி, அவரது டிரைவர் ஆகியோர் அர்ஷத் கையில் இருந்த பணப்பையை கேட்டுள்ளனர். ஆனால், அவர் தர மறுக்கவும், அர்ஷத்திடமிருந்து பணப்பையை கார்த்திக் பறித்து இன்ஸ்பெக்டரிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் அவர்கள் அனைவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி சிறிது தூரத்தில் இறக்கி விட்டதுடன், ``இங்கிருந்து ஓடி விடுங்கள்’’ என்று இன்ஸ்பெக்டர் வசந்தி மிரட்டியுள்ளார். ஆனால், ‘‘பையில் 10 லட்ச ரூபாய் பணம் இருக்கிறது. பணப்பையை தாருங்கள்’’ என அர்ஷத் கேட்டுள்ளார். மறுநாள் காவல்நிலையம் வந்து பெற்றுக்கொள்ளுமாறு வசந்தி கூறியுள்ளார். இதனால் மறுநாள் காவல்நிலையம் சென்று அர்ஷத் பணத்தை கேட்டதற்கு இன்ஸ்பெக்டர் வசந்தி, பணம் இல்லை என்று கூறியதுடன், கஞ்சா வழக்குப்பதிவு செய்து சிறையில் தள்ளி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து மதுரை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஜூலை 13ம் தேதி அர்ஷத் புகார் கொடுத்தார். விசாரணையின் அடிப்படையில் நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி, தேனியை சேர்ந்த பால்பாண்டி, குண்டு பாண்டி, சிலைமானை சேர்ந்த உக்கிரபாண்டி, கார்த்திக் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்தனர்.மேலும், இன்ஸ்பெக்டர் வசந்தியுடன் சேர்ந்து பாண்டி, கார்த்திக் உள்ளிட்டோர் இதுபோன்று மிரட்டி பணம் பறிப்பு சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. பணத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு கமிஷன் பங்கிடப்படுவதும் வழக்கம் என தெரிகிறது. அர்ஷத்திடமிருந்து பணம் பறிப்பதற்காகவே சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு வரக்கூறியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வசந்தியை சஸ்பெண்ட் செய்து மதுரை சரக டிஐஜி காமினி அதிரடியாக உத்தரவிட்டார்.

Related Stories:

>