நீர்வரத்து பாதைகளில் குப்பைகளை வீசக்கூடாது-ஆட்சியர் ஸ்ரீதர் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பெரிய ஏரி, சித்தேரி வரத்து வாய்க்கால் மற்றும் நீர் வெளியேறும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் தர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பெரிய ஏரி, சித்தேரி மற்றும் சித்தேரியின் வரத்து வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை மீள் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திடவும் பெரிய ஏரியின் அருகே வாய்க்காலில் தூர்வாரும் பணிக்கு இடையூறாக உள்ளவற்றை அகற்றி மழைக்காலம் தொடங்குவதற்கு முன் பணிகளை முடித்திடவும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.    

மேலும் பொதுமக்கள் நீர் வரத்து மற்றும் நீர் வெளியேறும் பாதைகளில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வீச வேண்டாம். மேலும் மழை நீரை முழுவதும் சேமிக்க மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவரும் அனைத்து பணிகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்டறிந்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் கணேசன், வினோதினி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: