மசினகுடி அருகே வாகனங்களை விரட்டிய காட்டு யானையால் பரபரப்பு

ஊட்டி :  மசினகுடி அருகே ஆனைக்கட்டி வனப்பகுதியில் வாகனங்களை துரத்திய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி  மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆனைக்கட்டி, சீகூர்,  சிங்காரா வனப்பகுதிகளில் கணிசமான அளவு காட்டுயானைகள் உள்ளன. அதிகாலை  மற்றும் மாலை, இரவு வேளைகளில் இங்குள்ள வனச்சாலைகளில் காட்டுயானைகள்  சுதந்திரமாக உலா வருகின்றன.

இந்த நிலையில் மசினகுடியில் இருந்து அடர்ந்த  வனப்பகுதிக்குள் அமைந்துள்ள ஆனைகட்டி பழங்குடியின கிராமத்துக்கு செல்லும்  சாலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாலை 4 மணிக்கு காட்டு யானைகள்  முகாமிட்டிருந்தன. அதில் ஒரு யானை அந்த வழியாக வந்த வாகனங்களை திடீரென  துரத்தியது. இதை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை பின்நோக்கி  வேகமாக இயக்கினர். சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு துரத்தி வந்த காட்டுயானை,  அதன்பிறகு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது.

இதனால் அங்கு பரபரப்பு  ஏற்பட்டது. ‘‘முதுமலை வனப்பகுதியில் மழை காரணமாக பசுமைக்கு திரும்பியுள்ள  நிலையில் யானைகள் சாலையோரங்களில் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன. சாலைகளில்  பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும்’’ என வனத்துறையினர்  அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories: