புதுச்சேரியில் பரபரப்பு திருடன் என நினைத்து வாலிபரை தாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்த பங்க் ஊழியர்கள்: பாஜ நிர்வாகி உள்பட 4 பேர் கைது

புதுச்சேரி:  புதுவை மேட்டுப்பாளையத்தில் ராஜமவுரியா (27) என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் இந்த பங்கிற்கு ஒரு வாலிபர் ஒருவர் நடந்து வந்துள்ளார். பங்க் ஊழியர்கள், திருடன் என நினைத்து அவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார். தகவலறிந்து பங்க் உரிமையாளர் ராஜமவுரியா, அவரது தம்பி ராஜவரதன் (21) ஆகியோர் வந்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர், வெளியூரில் இருந்து வருவதாகவும், ஓரமாக படுத்து தூங்க வந்ததாகவும், திருட வரவில்லை எனவும் கூறியுள்ளார். அப்போது ராஜமவுரியாவின் நண்பர்கள் அவரை தாக்கினர். மேலும் பங்கில் இருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி உண்மையை  சொல்லாவிட்டால் எரித்து விடுவதாக மிரட்டியுள்ளனர். அப்போது, ஒருவர் திடீரென தீக்குச்சியை உரசியதால் அந்த வாலிபர் மீது தீப்பற்றியது.

பின்னர் தீயணைப்பு சாதனங்களை பயன்படுத்தி தீயை அணைத்தனர். தீக்காயத்துடன் அந்த வாலிபர் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு நடந்தே சென்றுள்ளார். அங்கிருந்த டாக்டர்கள் அவரை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து மேட்டுப்பாளையம் போலீசார் வந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர், திருச்சி பிரட்டியூர் கீழத் தெருவைச் சேர்ந்த காமராஜ் மகன் சதீஷ்குமார் (31) என்பதும், வேலை தேடி புதுச்சேரி வந்திருப்பதும் தெரியவந்தது. வேலை எதுவும் கிடைக்காத நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு மழை பெய்ததால் பெட்ரோல் பங்க் ஓரமாக படுத்து தூங்க சென்றபோது, பங்க் ஊழியர்கள் திருடன் என நினைத்தும், பில்லி சூனியம் வைக்க வந்ததாக நினைத்தும்  தாக்கி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பங்க் உரிமையாளர் ராஜமவுரியா, அவரது தம்பி ராஜவரதன், ஊழியர்கள் சிவசங்கர் (19), குமார் (47) ஆகியோரை கைது செய்தனர்.  பங்க் உரிமையாளர் ராஜமவுரியா பாஜக நிர்வாகி ஆவார்.

Related Stories: