ஊராட்சி செயலரை பணி நீக்கம் செய்யக் கோரி சுவரொட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் சாலை மறியல்

ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த  அச்சமங்கலம் பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஊராட்சி செயலராக அதே பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக 10க்கும் மேற்பட்ட முறை சாலை மறியல் நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று பொதுமக்களின் அடிப்படை வசதிகளான தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் கேட்டு பலமுறை ஊராட்சி செயலர் பிரபுவிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இதற்கு ஊராட்சி செயலாளர் கண்டுகொள்ளாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது .இதனை அடுத்து அதே பகுதியை சேர்ந்த மங்குண்டு மகன் கார்த்திக்(36), தங்கள் பகுதியில் குடிநீர் சரிவர வரவில்லை என பிரபுவிடம் தொலைபேசியில் கூறியுள்ளார். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக கார்த்தியை ஆபாச வார்த்தைகளால் ஊராட்சி செயலர் பிரபு திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்தி ஊர் பெரியோர்களிடம் இது குறித்து கூறியுள்ளார்.

இதனையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தகாத வார்த்தைகளால் பேசிய ஊராட்சி செயலரை பணி நீக்கம் செய்யும் வரை போராட்டம் என சுவரொட்டியை ஒட்டியுள்ளனர். மேலும், ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு போட்டு திடீரென நேற்று மாலை அப்பகுதி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருப்பத்தூர் டிஎஸ்பி சாந்தலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உங்களது அடிப்படை வசதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் மற்றும் ஊராட்சி செயலர் பிரபுவை வேறு இடத்துக்கு மாற்ற வழி வகை செய்யப்படும் என்று கூறியதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் ஜோலார்பேட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: