ரூ1 கோடி, அமைச்சர் பதவி வழங்குவதாக கூறி ஜார்க்கண்ட் காங். கூட்டணி அரசை கவிழ்க்க சதி: எம்எல்ஏவிடம் பேரம் பேசி கைதான 3 பேர் பாஜகவை சேர்ந்தவர்களா?

ராஞ்சி: ஜார்க்கண்ட் காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க சதி நடத்தியதாக, எம்எல்ஏவிடம் போனில் பேசிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள், பாஜகவை சேர்ந்தவர்களா? என்பது குறித்து விசாரிக்கின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜே.எம்.எம் - காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோலிபிரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ நமன் பிக்சல் கொங்காரியின் செல்போன் எண்ணை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு,  ‘எங்களுக்கு ஆதரவு அளித்தால் ரூ.1 கோடி மற்றும் அமைச்சர் பதவி கிடைக்கும்’ என்று ஆறு முறை தொடர்பு கொண்டதாகவும், மூன்று பேர் இதேபோல் தொடர்பு கொண்டு பேசியதாக அவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக, ஜார்க்கண்டில் கூட்டணி அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து எம்எல்ஏ நமன் பிக்சல் கொங்காரி கூறுகையில், ‘எங்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மூலம் என்னை மூன்று பேர் போனில் பேசினர். அவர்கள் சில நிறுவனங்களில் வேலை செய்வதாக கூறினர். நான் அவர்களிடம் மறுத்த போதிலும், அவர்கள் கேட்கவில்லை. ஒருமுறை, அவர்கள் ரூ .1 கோடிக்கு மேல் பணம் தருவதாக கூறினர். மேலும், அமைச்சர் பதவி பெற்று தருவதாகவும், பாஜகவுக்காக தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறினர். ஆனால், பாஜக நிர்வாகிகள் சார்பில் எவரும் என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை. அதிர்ச்சியடைந்த நான், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆலம்கீர் ஆலம் மற்றும் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தேன்’ என்றார்.

ஆனால், இவ்விவகாரத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் தலைவர்கள் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இருந்தும், கோட்வாலி போலீசார் அபிஷேக் துபே, அமித் சிங், நிவரன் பிரசாத் மஹ்தோ ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் கைது செய்யப்பட்ட நிவரன் பிரசாத் மஹ்தோ, பாஜகவின் அடையாள அட்டை வைத்திருந்ததாக கூறப்படுகிளறது. இதுகுறித்து ஜார்கண்ட் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷாதேவ் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட நபர்கள் பாஜக உறுப்பினர்கள் அல்ல’ என்றார். ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏவை விலைக்கு வாங்கும் செய்தி வெளியாகி உள்ளதால், அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: