கொள்ளிடம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக முட்செடிகள்-வெட்டிஅகற்ற வலியுறுத்தல்

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து குத்தவக்கரை, சரஸ்வதிவிளாகம், கொன்னகாட்டு படுகை,கீரங்குடி ஆகிய கிராமங்கள் வழியாக மாதிரவேளூர் செல்லும் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலை பலவருடங்களாக மேம்படுத்தபடாமல் உள்ள நிலையில் போக்குவரத்துக்கு மிகுந்த இடையூறாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இதே ஆற்றங்கரை சாலையின் இரு புறங்களிலும் நீண்டு வளர்ந்துள்ள கருவேல முள் செடிகள் சாலையை அடைத்துக் கொண்டுள்ளதால் சாலையின் வழியே நடந்து செல்ல கூட முடியாத நிலை உள்ளது. கொள்ளிடம் ஆற்றங்கரை ஓரமுள்ள கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் வரும்போது சாலையின் இருபுறங்களிலும் உள்ள சீமைக்கருவேல முட்கள் உடல் மற்றும் முகங்களில் பட்டு விடுவதால்அவதிக்குள்ளாகின்றனர்.

விவசாயிகள் விளைபொருட்களை இருசக்கர வாகனங்களில் கொள்ளிடம் மற்றும் வெளிப்பகுதியில் உள்ள வியாபார கடைகளுக்கு விற்பனை செய்ய வரும்போது பெரும் சிரமத்துடன் அச்சத்துடனும் வந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது. சாலையின இருபுறமும் உள்ள சீமைக் கருவேல முள்செடிகள் சாலையில் செல்பவர்களுக்கு விபத்துக்களை ஏற்படுத்துவதற்கு பெரும் காரணமாக இருந்து வருகிறது. டூவீலர்களில் செல்லும்போது கண்களை பதம் பார்க்கிறது.எனவே கருவேல முள் செடிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: