சேலம் அருகே மான் கறி சமைத்து சாப்பிட்ட விவசாயிக்கு ₹30 ஆயிரம் அபராதம்

சேலம் : சேலம் அருகே கருமந்துறையில் மான் கறியை சமைத்து சாப்பிட்ட விவசாயிக்கு ₹30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 3 கிலோ கறி பறிமுதல் செய்யப்பட்டது.  

சேலம் மாவட்டம் கருமந்துறை வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்லூர், பட்டமேடு, மண்ணூர், பகுடுபட்டு ஆகிய வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லூர் பகுதியில் மான் கறி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகர் ஆரோக்கியசாமி, வனவர் மணிக்கண்டன் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் மான் கறி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மான் கறியை பதுக்கி வைத்திருந்த விவசாயி அழகர்ராஜை(30) வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர்.அதில், தண்ணீர் தேடி வந்த குட்டி மானை நாய்கள் துரத்தி கடித்துள்ளது. காயமடைந்த மான் அழகர்ராஜ் தோட்டத்தில் இறந்து கிடந்தது. அந்த மானை எடுத்துச் சென்று கறி சமைத்து சாப்பிட்டுள்ளார். மீதியுள்ள 3 கிலோ கறியை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மான் கறியை சமைத்து சாப்பிட்ட குற்றத்திற்காக விவசாயி அழகர்ராஜூக்கு வனத்துறையினர் ₹30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.  பின்னர் அவரிடம் இருந்து 3கிலோ மான் கறி பறிமுதல்  செய்யப்பட்டது.

Related Stories: