வாணியம்பாடி அருகே விஐபிக்கள் வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது-20 சவரன் பறிமுதல்

வாணியம்பாடி :  திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலை மாஞ்சாக்கொல்லை புதூர் பகுதியில் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், வாணியம்பாடி தனியார் பள்ளி தாளாளர் செந்தில்குமார் ஆகியோரது பண்ணை வீடுகளில் கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி, வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று திருட்டு முயற்சி நடந்தது. அப்போது, 2 பண்ணை வீடுகளிலும் நகைகள், பணம் எதுவும் கிடைக்காமல் மர்ம நபர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் என கருதிய அவர்கள், ஹார்டு டிஸ்கை கைப்பற்றி எரித்துவிட்டு சென்றனர்.

இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகார்களின்பேரில் ஏலகிரி மலை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 23ம் தேதி வாணியம்பாடி நகராட்சி ஆசிரியர் நகரில் ஆசிரியர் வசீம்அக்ரம் என்பவரது வீட்டில் 35 சவரன் நகைகளும், கடந்த 13ம் தேதி முஸ்லிம்பூர் அபூபக்கர் தெருவை சேர்ந்த  அதாவூர் ரகுமான் என்பவரது வீட்டில் 85 சவரன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்து. இதுகுறித்து புகார்களின்பேரில் குற்றவாளிகளை பிடிக்கு எஸ்பி சிபி சக்கரவர்த்தி தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த நபரை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர் வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியை சேர்ந்த நவீத்(35) என்பதும், ஆசிரியர் வசீம் அக்ரம் மற்றும் அதாவூர் ரகுமான் ஆகியோரது வீடுகளில் நகைகளை திருடியவர் என்பதும் தெரியவந்தது. அதேபோல், ஏலகிரி மலையில் அமைச்சர் மற்றும் பள்ளி தாளாளர் வீடுகளில் திருட முயற்சி செய்தவர் என்பதும் தெரிந்தது.

இதையடுத்து, நவீத் பதுக்கி வைத்திருந்த 20 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப் பதிந்து நவீத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் நவீத்துடன் தொடர்புடைய நபர்கள் யார் யார்? என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகைகளை திருடிய சிறுவன்

வாணியம்பாடி முஸ்லிம்பூர்  பகுதியில் அதாவூர் ரகுமான் வீட்டில் நவீத் திருட சென்றபோது, வீட்டுக்குள் நுழைய முடியாதபடி சுற்றுச்சுவர் இருந்தது. இதனால் மேல்மாடி வழியாக வீட்டிற்குள் நுழைந்து செல்வதற்கு அங்குள்ள கம்பியை வளைத்து ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனை நகைகளை திருட வைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: