வாக்காளர்களுக்கு லஞ்சம் தெலங்கானாவில் பெண் எம்பி.க்கு 6 மாதம் சிறை

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடந்தது. இதில், மெகபூபாபாத் தொகுதியில் தெலங்கானாவின் தற்போதைய ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சார்பில் மலோத்து கவிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு தலா ரூ.500 பணம் கொடுத்ததாக மலோத்து கவிதா மற்றும் அவரது உதவியாளர் சவுகத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நாம்பள்ளியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையில், மலோத்து கவிதா மற்றும் அவரது உதவியாளர் சவுகத் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து, மலோத்து கவிதாவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வரபிரசாத் நேற்று உத்தரவிட்டார். இருப்பினும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதித்த நீதிபதி, அவருக்கு ஜாமீனும் வழங்கினார். இதனால், கவிதா சிறை செல்லாமல் தப்பித்தார்.

Related Stories: