பெரம்பலூர் அருகே பரபரப்பு புதிதாக திறந்த சுங்க சாவடியை இரு கிராம மக்கள் முற்றுகை: வயலுக்கு சென்றால் கூட கட்டணம் செலுத்தனுமா?

பெரம்பலூர்: பெரம்பலூர் - அரியலூர் வழியாக மானாமதுரை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பேரளி கிராமத்திற்கும், சித்தளி கிராமத்திற்கும் இடையே புதிதாக சுங்க சாவடி அமைக்கப்பட்டது. இதை நடத்த தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் 7 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டும் கடந்த ஓராண்டுக்கு மேல் திறக்கப்படாமல் இருந்த இந்த பேரளி சுங்க சாவடி நேற்றுமுன்தினம் முதல் செயல்பட தொடங்கியது. இதில் கார், ஜீப், வேன் அல்லது இலகு ரக வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.45, ஒருமுறை சென்று, மீண்டும் அந்த வழியாக திரும்பி வருவதற்கு ரூ.70, மாவட்டத்திற்குள் செல்லக்கூடிய வாகனங்களுக்கு ரூ.25 என வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில், சுங்க சாவடிக்கு அருகில் உள்ள சித்தளி, பேரளி கிராமங்களை சேர்ந்த மக்கள் நேற்று காலை 10.30 மணியளவில் அங்கு திரண்டு முற்றுகையிட்டனர். அப்போது பணியில் இருந்த ஊழியர்களிடம், எங்கள் இரண்டு கிராமங்களிலும் விவசாய நிலங்கள் உள்ளன. விளை நிலங்களுக்கு சென்று டிராக்டர், லோடு ஆட்டோ, மினிவேன், லாரிகளில் பருத்தி மற்றும் மக்காச்சோளம் போன்றவற்றை தினமும் வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. நாங்கள் 200 மீட்டர் தூரம் உள்ள வயலுக்கு சென்று வீடு திரும்பவுதற்கு கூட கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இதனால் விவசாயிகளிடம் டோல் கட்டணம் வசூலிக்க கூடாது என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஒரு மணி நேரம் நீடித்தது. தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி ஆரோக்கியபிரகாசம் தலைமையில் மருவத்தூர், குன்னம் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இன்று பெரம்பலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் அமைதி பேச்சு நடத்துவது, அதுவரை டோல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: