தரிசன டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் டிராவல்ஸ் ஏஜென்சிகள் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: ‘திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் டிராவல்ஸ் ஏஜென்சிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என திருப்பதி தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி அடுத்த மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட், ஆன்லைன் கல்யாண உற்சவ தரிசன டிக்கெட் ஆகியன ஆன்லைனில் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள ரேவதி டிராவல்ஸ் என்ற நிறுவனத்தினர், ஏழுமலையான் தரிசன டிக்கெட் பெற்று தருவதாக கூறி பக்தர்களிடம் அதிகளவில் பணம் வசூல் செய்வதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதையடுத்து, ரேவதி டிராவல்ஸ்  நிறுவனத்தின் மீது தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம்  போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில், திருமலை 2வது நகர காவல் நிலைய  போலீசார் அந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். இது தொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பக்தர்கள் ‘‘www.tirupatibalaji.ap.gov.in’’ என்ற தேவஸ்தான இணையதளத்தில் தங்கள் ஆதார் அட்டை எண் கொண்டு முகவரி பதிவு செய்து டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். எனவே, பக்தர்கள் இடைதரகர்களை ஊக்குவித்து அவர்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம். இது போன்று பக்தர்களிடம் அதிக பணம் வசூலித்து டிக்கெட் முன்பதிவு செய்யும் இடைத்தரகர்கள், டிராவல்ஸ் ஏஜென்சி மீது சட்டப்பூர்வமாக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: