காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நினைவுநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்: பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம்

கூடுவாஞ்சேரி: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவை தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் இப்ராஹிம், விஸ்வநாதன், கலைவாணி காமராஜ், அன்புசெல்வன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆராமுதன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு திருப்போரூர் உள்பட 6 தொகுதிகளில் போட்டியிட்டு வேட்பாளர்களை வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்தும், வரும் 7ம் தேதி முன்னாள் திமுக தலைவர் கலைஞர் நினைவுதினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கட்சியினர் அனைவரின் வீடுகளில் கலைஞரின் படத்தை திறந்து வைத்து, சமூக இடைவெளியுடன் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், பதவியேற்ற அன்றே 5 திட்டங்களை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தும், கொரோனாவை கட்டுப்படுத்தியதில் இந்தியாவிலேயே தலை சிறந்த முதல்வராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் இடத்தை பிடித்ததற்காக வாழ்த்து தெரிவித்தும், செப்டம்பர் 15ம் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், யாரை வேட்பாளராக நிறுத்துவது, அவர்களுக்கு திமுகவினர் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து பணியாற்றி அனைத்து பகுதிகளிலும் வெற்றிபெற அயராது பாடுபடுவோம். வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகாடமிக்கு வரும் 29ம் தேதி வருகை தரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், எம்பி., ஜி.செல்வம், எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, இதயவர்மன், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் நன்றி கூறினார்.

Related Stories: