கனமழை, நிலச்சரிவால் கோவாவில் தடம் புரண்டது ரயில்: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

பனாஜி: கனமழை மற்றும் நிலச்சரிவால் கோவாவில்  மங்களூரு - சிஎஸ்டி டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த இரண்டு நாட்களாக மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால் நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் 140க்கும் மேற்பட்ட மக்கள் பலியான நிலையில், பல இடங்களில் ரயில்பாதை தண்ணீரில் மூழ்கி உள்ளதால் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. கர்நாடகாவின் மங்களூருவில் இருந்து மும்பைக்கு பயணிக்கும் ரயில், நிலச்சரிவில் சிக்கியதால் கோவாவில் தடம் புரண்டது. மங்களூரு - சிஎஸ்டி டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயிலான இந்த ரயிலின் இன்ஜின் பகுதி மற்றும் முதல் பெட்டி மட்டும் தடம் புரண்டது.

அதனால், இந்த ரயில் மார்காவோ-லோண்டா-மிராஜ் வழியாக திருப்பி விடப்பட்டது. ரயில் தடம் புரண்ட விபத்தில், எந்த பயணிகளும் பாதிக்கப்படவில்லை. இடைவிடாத மழையால் தென்மேற்கு ரயில்வேயின் ஹூப்ளி பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், அந்த ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. ரத்து செய்யப்பட்ட ரயில்களில் ஹஸ்ரத் நிஜாமுதீன்-வாஸ்கோ டா காமா எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல், வாஸ்கோ டா காமா-ஹவுரா எக்ஸ்பிரஸ், வாஸ்கோ டா காமா-திருப்பதி எக்ஸ்பிரஸ், வாஸ்கோ டா காமா- ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் ஆகியனவாகும்.

Related Stories: