ஆடி முதல் வெள்ளியையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு-பக்தர்கள் திரண்டனர்

கிருஷ்ணகிரி : ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று ஆடி முதல் வெள்ளி என்பதால், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், அதிகாலையில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதே போல், ராசு வீதியில் உள்ள துலுக்காணி மாரியம்மன் கோயில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக் கவச அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஜோதி விநாயகர் கோயில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில், அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக் கவசத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அப்போது, பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர்.

அதே போல், ஜக்கப்பன் நகர் 8வது குறுக்கு தெருவில் உள்ள ராஜகாளியம்மன் கோயிலில், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள அம்பா பவானி கோயிலில், அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். குறிப்பாக கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோயிலில் ஏராளமான பெண் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் நேற்று ஆடி முதல் வெள்ளி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே அகரம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில், குரு பூர்ணிமா மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், பெண்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா தண்டபாணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

ஊத்தங்கரை: ஆடி வெள்ளியையொட்டி ஊத்தங்கரை ஆஞ்சநேய சுவாமி கோயில் மணி மண்டபத்தில் பாலா திரிபுர சுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.

Related Stories: